Saturday, June 15, 2013

மௌனம் வலியது! (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை)


மௌனம் வலியது!
- சண்.சிவா

நள்ளிரவு, சரியாக மணி 12.00.
வசந்தா தன் தந்தையை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
எந்தவித சலனமுமில்லாது படுத்திருந்தார் அவர்.
அப்பாவின் மௌனம் இருநாட்களாய் கொன்றுகொண்டிருந்தது அவளை.
உலகத்திலேயே மிகப்பெரிய தண்டனை நம் மீது அன்பு வைத்திருப்போர் மௌனத்தை நமக்குத் தண்டனையாய்த் தருவதுதான்.
அதை அனுபவித்தாள்... அழுதுவிடலாம் போலிருந்தது... குழம்பித் தவித்தாள்... அவளால் தூங்க இயலவில்லை, படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
எப்படியும் எழுவார்... என் செல்லமே! என் தாயே! என் அம்முகுட்டியே! என முத்தமிடுவார். பிறந்தநாள் வாழ்த்துகள் என கத்துவார், பரிசுகள் தருவார், அமர்க்களப்படுத்துவார்....
சஸ்பென்ஸுக்காகத்தான் உறங்குவதுபோல் நடிக்கிறார் என்றெல்லாம் நினைத்தாள்.
இன்று அவளின் பிறந்தநாள்...
ஒவ்வொரு வருடமும் அவளின் பிறந்தநாளுக்கான முதல் நொடி அப்பாவின் வாழ்த்துகளோடுதான் தொடங்கும். 17 வருடமாய் இது அந்த வீட்டின் வசந்த விழா...
ஆனால் இன்று?
இதோ! 18 வயது பிறந்தாகிவிட்டது. நொடிகளும் கடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் வாழ்த்துகள் மட்டும் வந்தபாடில்லை... அதைவிடக் கொடுமை இரு நாட்களாய்த் தொடரும் அப்பாவின் மௌனம்.
மீண்டும் அப்பாவைப் பார்த்தாள்... நெஞ்சு கனத்தது.
அப்பாவை அப்படியே கத்தி எழுப்பிவிடலாம் போலிருந்தது.
அப்பா... ப்ளீஸ்ப்பா.... என்பது போல் ஏங்கினாள்...
அழவேண்டும் போலிருந்தது... அழுதேவிட்டாள்.
இரவு நீண்டது... எங்கும் நிசப்தம்.
ஆர்ப்பாட்டத்திற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை.
இரவு முழுதும் தூக்கமில்லாது போர்வைக்குள்ளேயே புழுங்கிக் கிடந்தாள்.
விடிந்தது... விழித்துதான் கிடந்தாள்.. அப்பா எழுப்பும் வரை எழும்பக்கூடாது எனும் சபதத்தோடு எழும்ப மறுத்தாள்.
அம்மா எழுப்பியும் கேட்கவில்லை...
“நீயும் அப்பா கட்சிதானே... போ...” என கோபமாக மீண்டும் போர்த்திக்கொண்டாள்.
நொடிகள் கடந்தது...
அப்பாவைப் பார்த்தாள்... அசைவது தெரிந்தது.
போர்வை விலக்கினார்,
மெல்ல எழுந்தார்,
விழிகள் சுத்தம் செய்தார்...
மௌனமாய் நகர்ந்தார்.
ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. மீண்டும் போர்வைக்குள்ளேயே சுருண்டாள்.
நேரம் கடந்தது... மீண்டும்  எழுப்ப முயன்ற அம்மாவிடம் எழும்ப மறுத்து எரிந்து விழுந்தாள்.
ஆனால் அவரோ... காலைக் கடன் முடித்தார். குளித்தார். பேப்பர் படிக்கவில்லை, சாப்பிடவில்லை அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
எதிர்பார்த்துக் கிடந்த  அவளின் ஏக்கம் உச்சமானது. ஓவென்று கத்த ஆரம்பித்தாள். மெத்தையைப் பிய்த்தெறிந்தாள்.
அருகிலிருந்த உடைபடும் அனைத்தும் உடைந்துபட்டன.
அம்மா அவள் அருகில் வந்தாள். அவளின் தலைகோதினாள், தட்டிக்கொடுத்தாள், சீக்கிரமா கிளம்பு காலேஜுக்கு நேரமாச்சு என்றாள்.
அவள் அம்மாவையேப் பார்த்தாள்.
“ஏம்மா நீயுமா?
இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?”  என்றாள்...
“பெத்தவ எனக்குத் தெரியாதா... எல்லாம் தெரியும்... நீ கெளம்பு”
“அப்புறம் ஏம்மா... அப்பாவும் நீயும், இப்படிப் பண்றீங்க” என சொல்லிக் கொண்டிருக்கும்போதே....
ஒருவர் அஞ்சல் தபாலைக் கொண்டுவந்தார்.
அம்மாதான் வாங்கினாள்...
ஆனால், பெறுநர் வசந்தாதேவி என்றிருந்ததால், அவளிடமே கொடுத்தாள் அம்மா.
சந்தேகத்தோடு அதை வாங்கியவள், இதை யார் அனுப்பியிருக்கக்கூடும் என அனுப்புநர் முகவரி பார்த்தாள்.
அதிர்ச்சியானாள்...
அதில்..
அனுப்புநர்
தாயுமானவன் (உன் தந்தை)
என்றிருந்தது.
அப்பாவின் கையெழுத்துதான் என்பதை உணர்ந்தவள், அவசரமாய்ப் பிரித்தாள், படிக்கத்தொடங்கினாள்...

என் தாய்க்கு!
உன் மகன் எழுதுவது...
ஆமாம்!
என்னைப் பொறுத்தவரைக்கும் நீ என் மகளல்ல தாய்தான். இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசித்தது என் தாயை மட்டும்தான். என்னை அதிகம் நேசித்த ஒரு ஜீவன் உண்டென்றால் அதுவும் என் தாய்தான்.
ஆனால் இன்று என் தாய் இல்லை. என் தாயாய் நீ இருக்கிறாய்..
எனக்குப் பெண்குழந்தைதான் பிறக்க வேண்டும் என நான் வேண்டியபடியே நீ பிறந்தாய்.
வசந்தாதேவி என்று என் தாயின் பெயரையே உனக்குச் சூட்டி மகிழ்ந்தேன்.
நீ பிறந்த அந்த நொடியில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.
அதனால்தான் அந்த நாளை, அந்தத் தருணத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க உன் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தேன்.
இதுவரைக்கும்  நீ கேட்டு நான் எதையும் மறுத்ததில்லை. உன் சொல்லைத் தவிர வேறு யார் சொல்லையும் கேட்டதுமில்லை.
நீயே நம் வீட்டில் ஆட்சி செய்தாய்....
சிறுவயதிலிருந்தே உனக்கு என்ன பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் உனக்காக நான் வாங்கித் தருவது எதுவாக இருந்தாலும் அது உனக்கும் பிடித்திருந்தது.
என் சிறகின் கதகதப்பிலேயே அன்றிலிருந்து இன்றுவரை உன் சுவாசம் இருந்தது.
அப்பா இல்லையேல் அசைவதில்லை என எத்தனையோ முறை அடம்பிடித்திருக்கிறாய்.
அம்மா செல்லமா.... அப்பா செல்லமா என்று சிலர் உன்னிடம் கேட்பார்கள். நீயோ யோசிக்காமல் அப்பா செல்லம் என்று என்னைப் பார்த்துச் சிரிப்பாய்.
ஒருநாள் நீ பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்தாய். நான் குளித்துக்கொண்டிருந்தேன். நீ உன் அம்மாவிடம் அப்பா எங்கே என்றாய்?
அம்மாவோ விளையாட்டாக அப்பாவை பூனை தூக்கிப்போய்விட்டதாகச் சொன்னாள்.
நீயோ ஓவென அழுது, வீதி வந்து பூனையோடு சண்டையிட்டாய். பிறகு நான் வந்ததும் சமாதானமாகி மழலையாய்ச் சிரித்தாய்.
இப்படி அங்குலம் அங்குலமாக என்னால் கவனிக்கப்பட்டவள் நீ.
அங்குலம் அங்குலமாக என்னைக் கவனித்தவளும் நீதான்.
மெல்ல மெல்ல நீ வளர்ந்து வந்தாய்.... உனக்கென எவ்வித கட்டுப்பாடுகளும் நம் வீட்டில் இல்லை.
உன் கனவுகளும் நான் நிறைவேற்றும்படியான எல்லைகளுக்கு உட்பட்டே இருந்தன.
ஒருநாள் ஐயோ... ‘அப்பா'... என்று கதறினாய், வயிற்றைப் பிடித்து, கண்களை இறுக்கி, கூனிக் குறுகி மிகுந்த சத்தத்தோடு தரையில் விழுந்தாய்.
நான் பதறும் முன்னரே உன் தாய் உன்னைத் தாங்கி, மார்போடு புதைத்து, ஆனந்தக் கண்ணீரை அருவியாய் அவிழ்த்தாள்...
நீ பூப்படைந்துவிட்டதாய் புன்னகைப் பூத்தாள்... உன்னை முத்தமிட்டு உருகினாள்.
நீ பிறந்தபோது அடைந்த அதே மகிழ்ச்சியை, அதே பேரானந்தத்தை இரண்டாம் முறை அன்று அனுபவித்தேன்.
அன்று மாலை உன் தலைக்குத் தண்ணீர் ஊற்றி, தாய் மாமன் சீர் முடித்து, மஞ்சள் முகமாய், பூவும் பொட்டுமாய், மங்கலப்பட்டில் உன்னைப் பார்த்தேன். என் அம்மாவின் சாயலை முதன் முதலாய் உணர்ந்தேன். கையெடுத்துத் தொழ வேண்டும் போலிருந்தது. சபையறிந்து அடக்கம் காத்தேன். உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாய் உருகினேன்.
நாளுக்கு நாள் நான் உன் மீது வைத்திருந்த மதிப்பும், பொறுப்பும் கூடிக்கொண்டே போனது.
நீ என்ன படிக்க வேண்டும் என்று நினைத்தாயோ, அதையேதான் நானும் தேர்வு செய்தேன். நீயும் படித்தாய்.
உன் மேல்நிலைக் கல்வி முடிந்து கல்லூரிக்குப் பயணப்பட்ட பொழுதுகளில்தான் எனக்கும் உனக்குமான உளவியல் சிறிது தடுமாறத் தொடங்கியது.
ஒருநாள் கல்லூரி விட்டுத் தாமதமாக இரவு ஏழு மணிக்கு வீடு வந்தாய்.
என்னம்மா இவ்வளவு நேரம் கழித்து வருகிறாய் என்றேன்.
தோழியின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்ததால் தாமதம் என்றாய்.
உன் உண்மையின் இருப்பில் தூசி விழுந்துவிட்டது என்பதை உன் தடுமாற்றம் உணர்த்தியது.
அப்பொழுதே உன்னைக் கவனித்திருக்க வேண்டும், இருப்பினும் உன் மீதான என் நம்பிக்கை என் இயல்பை இறுக்கச் செய்தது.
அதற்குப் பிறகு நீ தயங்குவது எனக்கும், எனது சந்தேகம் உனக்கும் புரிவதுபோல் இருந்தாலும் புரியாததுபோல் தொடர்ந்தோம்.
ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பு எதேச்சையாக ஓர் உணவு விடுதியில் உன்னைப் பார்க்க நேர்ந்தது.
கல்லூரிக்குச் செல்லாமல் இங்கு இருக்கிறாளே என்று உன்னை நோக்கி நகர்ந்தேன்.
அப்பொழுதுதான் அவனையும் பார்த்தேன். உன்னோடு பள்ளியில் படித்த பக்கத்து ஊர்ப் பையன். உன்னிடம் பேசிக்கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
உன் திருமணத்திற்காக நான் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையை அந்த நொடிகள் சுக்குநூறாய் உடைத்தெறிந்தன.
என்னால் அங்கு நிற்க முடியவில்லை, நெஞ்சு வலித்தது, மூச்சுத் திணறியது... மருத்துவமனை நோக்கி ஓடினேன்... ‘முதல் அட்டாக்' எச்சரிக்கையாக இருங்கள் என்றார் மருத்துவர்.
நான் வீடு வந்தேன். கதவைத் தாழிட்டேன். அழும் வரைக்கும் அழுது முடித்தேன்.
சிறிது நேரத்திலேயே நீயும் வந்தாய்... என்னப்பா உடம்பு சரியில்லையா? மூஞ்சியெல்லாம் வீங்கியிருக்கு என்றாய்...
பிறகு உன் அறைக்குள் போய் உட்கார்ந்துகொண்டாய்.
அன்று இரவு நீயும் பேசவில்லை... நானும் பேசவில்லை.
மறுநாள் வேலைக்குச் செல்லாமல் அந்தப் பையன் ஊர் சென்று விசாரித்தேன். உனது தேர்வு சரியானதல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.
அவன் வீடு சென்று அவன் தந்தையைப் பார்த்து முறையிட்டேன்.
“யோ பொட்டப் புள்ளைய நீ கட்டுப்படுத்தி வளர்க்கணும், ஒழுங்கா வளர்க்கத் துப்பில்ல; எம் பையனப் பத்தி பேச வந்திட்டியா? போயா... போ...” என்றார்.
நான் பையனைப் பார்த்தேன் அவனின் பருவத் தடுமாற்றம் புரிந்தது.
‘நா ஒன்னும் உங்க பொண்ணு பின்னாடி சுத்தல. அவதான் போன் போட்டு வாங்க, வாங்கனு கூப்பிட்டா என்றான்.
மேலும் நீ அவனுக்கு எழுதிய கடிதத்தையும், புகைப்படத்தையும் என்னிடம் காண்பித்து தன்னை நிரபராதியாக்கத் தன் தந்தையிடமிருந்து தப்பித்தான்.
ஆனால் நான் மட்டும் குற்றம் சுமத்தப்பட்டவளின் தந்தையாய், குற்றுயிரும், குலையுயிருமாய் கடித சாட்சியோடும், கனத்த இதயத்தோடும் வீடு வந்தேன்.
உன் அம்மாவிடம் அழுதேன்.
நீயாக உன் தவற்றை உணராத வரை உன்னிடம் பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆனால் நீயோ போலியாய் உன் பொழுதுகளைக் கழித்தாய்...
என் மன இறுக்கம் உன்னுடன் பேச ஒத்துழைக்கவில்லை.
உன் வாழ்வையே நீ தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பெரிய மனுசியான பிறகு இனி நான் எதற்கு?
அதனால்தான் மௌனம் தொடர்ந்தேன்.
இருப்பினும் இன்று உனக்குப் பிறந்தநாள்...
பரிசுகள் பெற்றே பழக்கப்பட்டவள் நீ...
என்னிடமிருந்து பரிசினை எதிர்பார்ப்பாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உனக்கானப் பரிசைத் தேர்வு செய்து உன் அறையில் வைத்துள்ளேன்.
உன்னுடைய பூப்புனித நன்னீராட்டு விழாவிற்கு நாம் எல்லாரும் சேர்ந்து குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, உனக்கு மிகவும் பிடித்தது என்று சட்டமிட்டு வைத்திருக்கிறாயே அதன் அருகில் சென்று பார்...
எடுத்துக்கொள்...
கூடவே என் மௌனத்தையும்தான்...

இப்படிக்கு
தாயுமானவன்
(உன் தந்தை)

உணர்வு பிதுங்கிய நிலையில் அக்கடிதத்தை முடித்தாள்...
நெஞ்சுக்குள் அமிலம் பரவியது போன்ற ஓர் உணர்வு. விழிகளில் வெள்ளம். உலகத்தின் ஒட்டுமொத்த சுமையும் தன்மீது சுமத்தப்பட்டிருப்பதாய் நினைத்தாள்.
தன் அறையை நோக்கி ஓடினாள்....
அப்பாவும், அம்மாவும் சிரித்துக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை எடுத்தாள்....
மார்போடு அணைத்தாள்...
மண்டியிட்டாள்....
முட்டி முட்டி அழுதாள்....
வலி நிறைந்த அப்பாவின் பரிசை வலியோடு தேடினாள்....
புகைப்படத்திற்கு அருகிலேயே இருந்தது அந்தப் பரிசு....
அன்புள்ள மகளுக்கு என்ற வரிகளைச் சுமந்த அந்தக் கவரை
எடுத்தாள்...
பிரித்தாள்....
அதில்....
“‘என் உயிரினும் மேலான காதலனுக்கு' என்று அவள், அவனுக்கு எழுதிய கடிதமும், அவனோடு நெருக்கமாய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இருந்து ஈட்டியாய் குத்தியது.
கத்தினாள்....
கதறினாள்...
நார் நாராய் கிழித்தெறிந்தாள்....
குற்ற உணர்வில் குமுறினாள்....
தந்தையை நினைத்து ஏங்கினாள்....
அப்பா... அப்பா... அப்பா....
தந்தையைத் தேடி ஓடினாள்...
நெஞ்சுவலியில் அவர் இறந்துவிட்டதாய் அலுவலகத்திலிருந்து தகவல் வந்திருந்தது...!

Sunday, June 20, 2010

அன்புள்ள அப்பா..

அன்புள்ள அப்பா..
இன்று உலகமே நினைவுகூறும் தந்தையர் தினம்...தந்தையை மகிழ்விக்க பிள்ளைகளுக்குத் தரப்பட்ட உன்னத தினம்...தாங்கள் என்னையும்,தங்கையையும் அம்மாவின் மறைவிற்குப் பிறகு அன்போடு கவனித்துவருகிறீர்களே அது போன்ற ஒரு தந்தைக்காக அவரது மகள் எடுத்த முயற்சியால் உதித்த தினம்...
அப்பா..!

நம்பிக்கையின் உயிர் வடிவம் நீங்கள்..உலகின் வேறு எந்த சக்தியைக்காட்டிலும் மிகவும் வலியது தங்களுடனான என் இருப்பு....என் உலகம் நீங்கள் ..நான் பார்த்துணர்ந்த முதல் புத்தகம் தாங்கள்...என் பிஞ்சு விரல்களை உம் அஞ்சு விரல்கள் பற்றும் பொழுது பரவும் நம்பிக்கையை இன்று வரை வேறு எந்த விரல்களும் ஏற்படுத்தியதில்லை...மூச்சடக்கி தரையின் ஆழம் வரை சென்று நீர் எடுக்கும் வேரின் வலியை விழுதுகளோ,பறவைகளோ உணர்வதில்லை இருப்பினும் வேர்கள் தன் வேலையைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது..நீங்கள் என் வேர்..வசந்த காலங்களை மட்டுமே எமக்கு கொடுத்து இலையுதிர் காலத்தை இல்லாது செய்த வேர்.

அப்பா!
அங்குலம் அங்குலமாய் உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான்...உங்களால் எழுதப்பட்ட கவிதை நான்...ஆண்டுகள் 30 ஐக் கடந்த பின்பும் இக்கவிதையின் மீதான திருத்தல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது இருப்பினும் இன்னும் முழுமை பெறவில்லை என்பதில் தங்களுக்கு வருத்தம்தான்...அது அக் கவிதையை எழுதிய தங்களின் தவறல்ல எழுதப்பட்ட கவிதையின் தவறு.....
அங்குலம் அங்குலமாய் என்னை செதுக்கிய சிற்பியே!
தங்கள் வாழ்வின் அத்தனை நொடிகளும் என்னைப்பற்றிய நினைவுகளையே சுமந்து வருகிறது என்பதை நான் அறிவேன்...தங்கள் பார்வையின் வீச்சும் என்னை நோக்கிய இலக்காகவே இருந்து வருகிறது என்பதையும் அறிவேன்..
நீங்கள் எனக்களித்துவரும் சுதந்திரம் இன்னும் என்னை பிரமிக்க வைக்கிறது..என் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை வியக்கச் செய்கிறது..
இந்த நன்னாளில் தங்களின் ஆசிகளோடு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...